போபால்,
மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள பாட்லியா கிராமத்தில் 3 வயது சிறுமியை தெருநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாட்லியா கிராமத்தைச் சேர்ந்த நந்தினி என்ற 3 வயது சிறுமி நேற்று மாலை அந்த கிராமத்தில் உள்ள பண்ணை ஒன்றில் பிற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது திடீரென அங்கு வந்த சில தெருநாய்கள் அந்த சிறுமியைத் தாக்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் ஓடிவந்தனர்.
இதற்குள்ளாகவே நாய்கள் கடித்ததில் சிறுமியின் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அதிக அளவிலான இரத்தம் வெளியேறியது. இதையடுத்து சிறுமியை அருகிலுள்ள மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிறுமி நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, கோஹெபிசா பகுதியில், ஏழு வயது சிறுமியை தாயின் முன்னால் தெருநாய்கள் கடித்தன. கடந்த 2019-ம் ஆண்டில், ஆறு வயது சிறுவனை அவனது தாயின் முன்னால் 6 தெருநாய்களால் அடித்துக் கொன்றன. சிறுவனைக் காப்பாற்ற முயன்ற அவனது தாயும் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போபாலில் 4 வயது சிறுமியை 5 நாய்கள் துரத்திச் சென்று, தரையில் இழுத்து, கடித்துக் குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப்பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் மட்டும் ஏறக்குறைய 1 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.