புதுடெல்லி,
முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்பு பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தரவிடவும், துணைக்குழுவை கலைக்கக் கோரியும் கேரளத்தைச் சேர்ந்த ஜோ ஜோசப் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த மனு கடந்த 2-ந்தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு பதிலளிக்க அவகாசம் கேட்டிருந்தது. இந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள துணைக்குழுவை கலைக்கத் தேவையில்லை. முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக துணைக்குழு அமைத்தது சட்ட விரோதம் என தெரிவித்திருப்பதும், கணகாணிப்புக் குழு தனது அதிகாரத்தை துணைக்குழுவுக்கு அளித்திருப்பதாகக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இதே வழக்கில் தமிழக அரசு சமீபத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், முல்லைப்பெரியாறு அணையைக் கண்காணிப்பதற்காவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் ஏற்படுத்தப்பட்ட மேற்பார்வை குழுவுக்கு தகவலைத் திரட்டி தந்து துணைக் குழு உதவி வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வேறொரு வழக்கில் வாதாடி வருவதால் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் என வக்கீல் சாரதா தேஷ்முக் கோரிக்கை விடுத்தார்.
அதைப் பரீசிலித்த நீதிபதிகள், முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைத்ததுடன், இந்த வழக்கு விசாரணையை இனியும் தள்ளிவைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் தெளிவுபடுத்தினர்.