மும்பை,
சத்தீஷ்காரை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஆக்ரே (வயது 25). ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் பணி பெண்ணாக வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்காக அவர் கடந்த ஏப்ரலில் சத்தீஷ்காரில் இருந்து மராட்டியத்தின் மும்பை நகருக்கு புறப்பட்டு சென்றார். அவர் அந்தேரி நகரில் உள்ள பிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார். அவருடன் சகோதரி மற்றும் ஆண் நண்பர் ஒருவர் பாதுகாப்பிற்காக தங்கி இருந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் ஆக்ரே தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், ஆக்ரே பிளாட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
அவருடைய குடும்பத்தினர் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தபோது பதில் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தனர். இளம்பெண்ணின் நண்பர்கள் பிளாட்டுக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில், அந்த பிளாட் அமைந்த வளாக பகுதியில் துப்புரவு தொழிலாளியாக இருந்த விக்ரம் அத்வால் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பாதுகாப்பு கேமிராக்கள் உதவியுடன் விசாரணை தொடர்ந்து வருகிறது. குற்றவாளியை கைது செய்ய 12 போலீஸ் படை அமைக்கப்பட்டது. விக்ரமின் மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.