மும்பை,
"தூங்கினால் மட்டும் போதும், லட்சங்களில் சம்பாதிக்கலாம்" என்பதை மெய்ப்பித்து காட்டியுள்ளார் மும்பையை சேர்ந்த பெண் ஒருவர். ஜினியா சாட்டர்ஜி. பிரபல மெத்தை தயாரிப்பு நிறுவனம் நடத்திய வித்தியாசமான 'ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' போட்டியில் வெற்றி பெற்று, ரூ.9.6 லட்சம் ரொக்க பரிசை அவர் தட்டி சென்றுள்ளார்.
தரமான தூக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, வேக்பிட் நிறுவனம் 'ஸ்லீப் இன்டர்ன்ஷிப்' போட்டியை நடத்தியது. நாடு முழுவதிலுமிருந்து விண்ணப்பித்த 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரில் இருந்து, பல்வேறு கட்ட தேர்வுகளுக்கு பிறகு 10 பேர் மட்டுமே இறுதி போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் மும்பையை சேர்ந்த ஜினியா சாட்டர்ஜி என்ற பெண்ணும் அடங்குவார்.
கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற இப்போட்டியில், பங்கேற்பாளர்கள் தங்கள் சொந்த வீட்டிலிருந்தபடியே பங்கேற்றனர். இதற்காக நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட மெத்தை மற்றும் தூக்க கண்காணிப்பு கருவிகள் மூலம் தினமும் சுமார் 9 மணி நேர தூக்கம் கணக்கிடப்பட்டது. தூங்குவது மட்டுமின்றி, வாரந்தோறும் படைப்பாற்றல் மிக்க சவால்களும் வழங்கப்பட்டன. திரைப்பட காட்சிகளை தூக்கத்துடன் இணைத்து நடிப்பது, உரையாடல்களின் போது 'தலையணை', 'போர்வை' போன்ற வார்த்தைகளை சாதுரியமாக பயன்படுத்துவது போன்ற சுவாரசிய போட்டிகள் நடத்தப்பட்டன.
இறுதிச்சுற்றான 'பிக் பெட்' நிகழ்வில், படுக்கையறை வடிவமைப்பு மற்றும் தூக்க பொருட்கள் ஏலம் ஆகிய சவால்களில் சிறப்பாக செயல்பட்ட ஜினியா சாட்டர்ஜி, 'இந்தியாவின் தூக்க சாம்பியன்' பட்டத்தை வென்றார். நவம்பர் முதல் வாரத்தில் வெளியான முடிவுகளின்படி, அவருக்கு ரூ.9.6 லட்சம் பரிசு தொகையுடன், நிறுவனத்தின் செலவில் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.