ஆனேக்கல்:
'சிக்கன் கபாப்'பில் காரம் குறைவாக இருந்ததால் மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியர், போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவனத்தில்...
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48). இவரது மனைவி ஷாலினி. இருவரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். சுரேஷ் குடிபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடிபோதையில் வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
அதன்படி சம்பத்தன்று குடித்துவிட்டு வந்த அவர், 'சிக்கன் கபாப்' செய்யும்படி மனைவியை கூறினார். மனைவியும் சமைத்து கொடுத்தார். அப்போது கபாப்பில் காரம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுரேஷ் காரம் குறைவாக இருப்பதாக கூறி, மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி ஷாலினியை குத்தி, உருட்டுக்கட்டையால் தாக்கினார்.
தற்கொலை
இதில் பலத்த காயமடைந்த ஷாலினி மயங்கி விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஷாலினியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் மனைவி இறந்துவிட்டதாக நினைத்த சுரேஷ், போலீசாருக்கு பயந்து மைலசந்திராவில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன்தினம் இந்த தற்கொலை குறித்து பன்னரகட்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.