லக்னோ,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மத்திய அரசு ஹஜ் புனித பயணத்திற்கு வழங்கிய மானியத்தை ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட மானியத் தொகையானது பெண் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பில் வரவேற்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஹஜ் மானியம் என்ற பெயரில் இஸ்லாமியர்கள்தான் ஏமாற்றப்பட்டனர் என அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) தெரிவித்து உள்ளது.
ஏஐஎம்பிஎல்பி பொது செயலாளர் மவுலானா வாலி ராஹ்மானி பேசுகையில், ஹஜ் பயணத்திற்கு சென்ற இஸ்லாமியர்களுக்கு மானியம் கொடுக்கப்படவில்லை, மாறாக நஷ்டத்தில் இயங்கிக்கொண்டு இருக்கும் ஏர்இந்தியாவிற்குதான் மானியமாக வழங்கப்பட்டது. இது ஒரு கண் துடைப்பு மட்டும்தான். ஹஜ் பயணத்திற்கான மானியம் என கூறி இஸ்லாமியர்கள்தான் ஏமாற்றப்பட்டனர், என கூறிஉள்ளார். சாதாரண நாட்களுக்கு சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ள டிக்கெட் கட்டணம் ரூ. 32 ஆயிரம் மட்டும்தான். இதுவே ஹஜ் பயண நாட்களில் ஹஜ் பயணிகளிடம் ஏர்இந்தியா ரூ. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையில் கட்டணம் வசூலிக்கிறது.
மானியம் இல்லையென்றால் கட்டணம் குறைவாக இருக்கும். ஹஜ் செல்லும் இஸ்லாமியர்கள் ஏர் இந்தியாவில் மொத்தமாக டிக்கெட்களை வாங்குகிறார்கள், ஆதலால் அவர்களுடைய கட்டணம் குறைவாக இருக்கும். சர்வதேச விமான போக்குவரத்து சங்க விதிமுறைகளின்படி யாராவது புனித பயணம் மேற்கொண்டால் அவர்களுக்கு கட்டண தொகையில் 40 சதவிதம் தள்ளுபடி வழங்க வேண்டும். கட்டணம் மிகவும் குறையவில்லை என்றாலும், கட்டணம் வழக்கமான நாட்களில் வசூலிப்பதாக இருக்கும் என குறிப்பிட்டு உள்ளார் மவுலானா வாலி ராஹ்மானி.
அனைத்து இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரிய சேர்மன் யாசூப் அப்பாஸ் பேசுகையில், ஏர்இந்தியாவின் நஷ்டத்தை சரிசெய்யவே அரசு மானியத்தை பயன்படுத்துகிறது. மானியம் ரத்து செய்யப்பட்டதால் கிடைக்கும் நிதியை இஸ்லாமிய குழந்தைகளுக்கு பயன்படுத்தினால் நல்லதுதான், ஆனால் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஏழைகள் அதனை இனி தொடர முடியாது, என்றார்.