தேசிய செய்திகள்

காப்பகத்தில் 34 சிறுமிகள் பலாத்காரம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்

காப்பகத்தில் 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 அதிகாரிகளை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

பட்னா,

பீகாரின் முசாபர்பூரில், மாநில அரசின் நிதியுதவி பெறும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவிபெற்று காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது சிறுமிகளுக்கு நேரிட்ட கொடூரங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த பலாத்கார சம்பவத்தை சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பவம் தொடர்பாக விரிவாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் காப்பகத்தில் தடயவியல் ஆய்வு நடத்துமாறு சி.பி.ஐ. அதிகாரிகளையும் கோர்ட்டு கேட்டுக்கொண்டது. வழக்கின் அடுத்த விசாரணை 7ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6 அதிகாரிகளை பீகார் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. இவர்கள், முசாபர்பூர், பகல்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகள் பாதுகாப்பு துணை இயக்குனர்களாக பணியாற்றி வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.