மும்பை
ஷீனா போரா வழக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டு காலமாக நடந்து வருகிறது. இந்த வழக்கு பல்வேறு திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்தது. மும்பை போலீசார் மற்றும் சிபிஐ பொறுத்தவரை,ஒரு சட்டவிரோத ஆயுத வழக்கை விசாரிக்கும் போது தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கொலை வழக்கு. இது. ஷீனா போரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அவரது தாயார் இந்திராணி முகர்ஜி.
மும்பை போலீஸ் தகவல்படி ஷீனா போரா 2012 இல் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக தற்போது, ஷீனா போரா உயிருடன் இருப்பதாகவும், காஷ்மீரில் இருப்பதாகவும் சிபிஐ இயக்குநருக்கு இந்திராணி முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார். இது இந்த வழக்கில் மேலும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில்,
ஷீனா போரா உயிருடன் இருப்பதாக சிறையில் உள்ள ஒரு பெண் கூறியுள்ளார். அவர் ஷீனாவை காஷ்மீரில் பார்த்ததாகவும் சொல்கிறார்.எனவே சிபிஐ ஷீனா போரா உயிருடன் இருப்பது குறித்து கண்டறிய வேண்டும் என இந்திராணி முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு கடிதமும் எழுதியுள்ளார். எனவே இதுகுறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. இறந்ததாக கூறப்படும் ஷீனா போரா உயிருடன் இருப்பதாக இந்திராணி கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதை சுருக்கம்...
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் முன்னாள் மனைவி இந்திராணி முகர்ஜி. பீட்டர் முகர்ஜி இந்திராணியின் இரண்டாவது கணவர். இந்திராணியின் மகள் (முதல் கணவருக்கு பிறந்தவர்) ஷீனா போரா. இவரை இந்திராணி முகர்ஜி கனவரிடம் தனது தங்கை என கூறி வந்து உள்ளார். இந்த நிலையில் ஷீனா போராவை கடந்த 2012 ஆம் ஆண்டு இந்திராணி கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த சம்பவம் இந்திராணி முகர்ஜியின் டிரைவர் ஷியாம்வர் ராய் துப்பாக்கியுடன் பிடிபட்ட போது அவர் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து இந்திராணி கொலை செய்ததை அவர் பார்த்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் 2015 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.