மைசூரு,
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெறும் தசரா விழா உலக புகழ் பெற்றது. இது நவராத்திரி மற்றும் விஜயதசமியையொட்டி 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும் விழாவாகும். கர்நாடக காவல் தெய்வமாக கருதப்படும் மைசூரு சாமுண்டி மலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷாசூரனை வதம் செய்த நாள்தான் விஜயதசமி நாளாகவும், தசரா விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு கொண்டாடப்படும் தசரா விழா 411-வது தசரா விழா ஆகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை யானை சுமந்து செல்லும் நிகழ்ச்சி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, யானை மீது அம்பாரியில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி தேவியை மலர் தூவி வணங்கினார். தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அரண்மனை வளாகத்திற்குள் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.