பொதுமக்கள் எதிர்ப்பு
புதுவையில் மோட்டார் வாகன திருத்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்களை பிடித்து ரூ.1000 அபராதம் விதித்து வந்தனர்.
இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சட்டம் தொடர்பான கோப்புக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஷாஜகான் அனுமதி அளிக்காத நிலையில் கவர்னர் கிரண்பெடி மாற்று கோப்பு தயார் செய்து அனுமதி அளித்ததாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி இருந்தார். ஹெல்மெட் அணியாததற்கு போலீசார் அபராதம் விதிப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
நாராயணசாமி தடை
பா.ஜ.க.வினர் கவர்னரை நேரடியாக சந்தித்து அபராதம் வசூல் குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு மனு அளித்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.
அதன்பின் மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி அபராதம் விதிக்க தடை விதித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது என்று கவர்னர் கிரண்பெடி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று மாலை கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சட்ட விரோதமானது
முதல்-அமைச்சரின் உத்தரவு தவறானது. சட்டவிரோதமானது. எந்த ஒரு சட்ட அமலாக்க முகமையும் ஒரு சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்த முடியாது. இந்த சட்டம் மக்களின் நன்மைக்காகத்தான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தால் அவரது குடும்பம் அனாதையாகிறது. மற்றவர்களின் தயவு அவர்களுக்கு தேவைப்படுகிறது. கடுங்காயங்கள் அவர்களை நிரந்தர ஊனமாக்கி விடுகிறது. இதன் மூலம் சமூகத்தில் அவர்களுக்கு பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுகிறது.
ஹெல்மெட் அணியுங்கள்
எனவே அனைவரும் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். போலீசாருக்கு ஒத்துழையுங்கள். இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியுங்கள். அனைத்து சாலை பாதுகாப்பு விதிகளையும் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுங்கள்.
அமலாக்கத்தை பலவீனப்படுத்த எவரும் கொடுக்கும் எந்த செய்தியும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தின் நலனுக்காக அல்ல. புதுவை நிர்வாகம் உங்கள் பாதுகாப்புக்காக செயல்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு நியமித்த குழு ஏற்கனவே இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தை பார்த்துக்கொண்டுள்ளது. தயவு செய்து யாரும் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கவேண்டாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.