தேசிய செய்திகள்

தேசிய கல்விக்கொள்கை தேவையானது - மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி

எதிலும் மறுசீரமைப்பு அவசியம் என்பதால் தேசிய கல்விக்கொள்கை தேவையானது என்று மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.

புதுச்சேரி,

ஹுனர் ஹாட் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்துகொள்ள புதுச்சேரி வந்த மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் நடைபெற்ற இந்த கண்காட்சியை சுமார் 11 லட்சம் பேர் பார்வையிட்டு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கியுள்ளனர். இது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த கைவினை கலைஞர்களுக்கு ஊக்கத்தை தந்துள்ளது.

கடந்த முறை இந்த கண்காட்சி நடந்த போது சிறிய இடத்தில் நடந்தது. தற்போது பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த புதுவை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சில கல்வி நிறுவனங்களில், சீருடை தொடர்பான விதிகள் இருந்தால், அதனை பின்பற்ற வேண்டியது நமது கடமை. அதேபோல், வெளியே பொது இடங்களில் ஹிஜாப் அணிய எந்த கட்டுப்பாடும் கிடையாது. வழக்கமான நமது உரிமையை நாம் பயன்படுத்துகிறோம்.

புதுவையில் வக்பு வாரிய குழு அமையாமல் இருப்பது வேதனையாது. எனவே இது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய கல்விக்கொள்கையை பொறுத்த வரையில், பரவலாக ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும், எதிலும் மறு சீரமைப்பு அவசியம் என்பதால், தேசிய கல்விக்கொள்கை தேவையானது தான், என்றார்.