தேசிய செய்திகள்

ஆண்கள் பாதுகாப்புக்கான தேசிய மனித உரிமைக்குழு: கர்நாடகத்தில் புதிய முயற்சி

ஆண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதும் இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

பெங்களூரு,

நாடு முழுவதும் ஆண்களை பாதுகாக்க ஆண்கள் நல ஆணையம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் ஆண்கள் பாதுகாப்புக்கான தேசிய மனித உரிமைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான தொடக்க விழா நேற்று மண்டியா மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த குழுவின் நிறுவனத் தலைவராக ரஜினிராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். விழாவில் கர்நாடக மேல்-சபை உறுப்பினரும் (எம்.எல்.சி.), பா.ஜனதா மூத்த தலைவருமான எச்.விஸ்வநாத் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீர்வு

பெண்கள் எந்தப் பிரச்சனையை எதிர்கொண்டாலும், அது உடனடியாக ஊடகங்கள், போலீசார் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் ஆண்களுக்கு எதிரான வன்முறை அல்லது துன்புறுத்தல்களுக்கு அதிக கவனம் கிடைக்கவில்லை. ஆண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதும் இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.

சமீபத்தில் மைசூரு, ஹாசன் மற்றும் மண்டியா மாவட்டங்களில் பெண்களால் ஆண்களுக்கு எதிராக நடந்த சில வன்முறைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, காவல்துறை ஆண்களின் புகார்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கவும், ஆண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரவும், அதற்கான தீர்வை வழங்கவும் இந்தக் குழு செயல்படும். இவ்வாறு அவர் கூறினார். கர்நாடகத்தில் ஆண்கள் பாதுகாப்பு குழு தொடங்கப்பட்ட சம்பவம் பேசு பொருளாக மாறியுள்ளது.