மும்பை,
இந்திய டிஜிட்டல் சேவை துறையில் மிக முக்கியமான துறை என்றால் அது ஆன்லைன் புட் டெலிவரி சேவையும் மற்றும் குவிக் காமர்ஸ் துறையும் தான். அதிலும் குறிப்பாக, உணவு டெலிவரியை பொறுத்த வரை ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகிய இரு தனியார் நிறுவனங்களும் நெடுங்காலமாக இந்தியா முழுவதும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிறுவனங்கள் அறிமுகமான காலக்கட்டத்தில் 50 சதவீத தள்ளுபடி, 90 சதவீத தள்ளுபடி, குறித்த நேரத்திற்கு உணவு வரவில்லை என்றால் இலவசமாக உணவுகளை கொடுத்துவிட்டு செல்வது என புதிய புதிய பாணிகளை கையாண்டு வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்ததோடு, பல நபர்கள் ஹோட்டலுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தையே இதனால் கைவிட்டுவிட்டனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் வசித்து வரும் சிலரது வீட்டில் சமைக்க டொமேட்டோ (தக்காளி) இருக்கிறதோ இல்லையோ ஆனால் அவர்கள் பயன்படுத்தி வரும் போனில் சொமேட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவன செயலிகள் நிச்சயம் இருக்கும். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும்.
இந்தநிலையில் 2023-ம் ஆண்டில் ஆன்லைனில் அதிகபட்சமாக 3,500 முறை உணவு ஆர்டர் செய்த மும்பை சேர்ந்த ஹனீஸ் என்பவரை நாட்டின் மிகப்பெரிய உணவுப்பிரியர் எனக்குறிப்பிட்டுள்ளது சொமேட்டோ நிறுவனம். இவர் ஒரு நாளைக்கு சராசரியாக 9 முறை ஆர்டர் செய்துள்ளராம்.