திருவனந்தபுரம்,
கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா மட்டும் அல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கேரளாவுக்கு தற்போது தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவை என்றும் உணவு, உடைகள் தேவையில்லை என்றும் மத்திய மந்திரி கேஜே அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து கேஜே அல்போன்ஸ் கூறும் போது, கேரளாவின் நிலையை பிரதமர் மோடி பார்வையிட்டார். தற்போதுள்ள நிலையை சரி செய்ய என்ன தேவையோ அதை செய்வதாக உறுதியளித்துள்ளார். உடனடி நிதியாக 500 கோடி ரூபாய் அளித்துள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் 100 கோடி ரூபாயும், கிரண் ரிஜ்ஜு 80 கோடி ரூபாயும் அறிவித்துள்ளனர். ஆகையால் இப்போது நிதிக்கு பிரச்சினை இல்லை.
கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் முகாம்களில் உள்ளனர். மத்திய அரசு அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் உடையை வழங்கி வருகிறது. இதுவரை 3,700 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரிய நோய் தொற்று பாதிப்புகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பிளம்பிங் மற்றும் மர வேலைகள் உள்ளன. இப்போது உணவு மற்றும் உடைகள் தேவையில்லை. தொழில்நுட்ப வேலைகள் தெரிந்தவர்கள் தான் தேவை. அவர்களால் தான் கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல முடியும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.