புதுடெல்லி,
நீட் (NEET) வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே லீக்காகிவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக, கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 கோடி இளைஞர்கள் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கும், அரசுப் பணிகளைப் பெறுவதற்கும் நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆனால், அரசியல் ஆதரவுடன் செயல்படும் வினாத்தாள்களை கசிய விடும் கும்பல்கள், இந்த இளைஞர்களின் நம்பிக்கையையும் மன உறுதியையும் சிதைத்து வருகின்றன.
வினாத்தாள்களைக் கசிய விடும் மாபியா கும்பல்களும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் தலைவர்களும் தான் நாட்டின் உண்மையான எதிரிகள். இவர்கள் தேசத்தின் அடித்தளத்தையே அரித்துச் சிதைத்து வருகின்றனர். எனவே இதற்கு எதிராக இளைஞர்கள் நாடு தழுவிய அளவிலான, தீர்க்கமானதொரு போராட்டத்தைத் தொடங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.