புதுடெல்லி,
2021-ம் ஆண்டின் மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவேற்றும் பணி நேற்று மாலை தொடங்கியது.
அடுத்த மாதம் 15-ந் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை விண்ணப்பங்களை பதிவேற்றலாம். 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம். புகைப்படம் மற்றும் கையெழுத்து தொடர்பான இறுதி திருத்தங்களை ஏப்ரல் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை மேற்கொள்ளலாம்.
இந்த தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் ஏப்ரல் 12-ந் தேதி வினியோகிக்கப்படும். தேர்வுக்கான முடிவுகள் மே 31-ந் தேதி வெளியாகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான கட்டணம் கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளது.
இதன்படி கடந்த ஆண்டு பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.3,750 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.5,015 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 18 சதவீத ஜி.எஸ்.டி.க்காக ரூ.765 பிடித்தம் செய்யப்படுகிறது. இதைப்போல எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான கட்டணம் ரூ.2,750-ல் இருந்து ரூ.3,835 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான ஜி.எஸ்.டி. ரூ.585 ஆகும். தேர்வு கட்டண உயர்வால் மாணவ-மாணவிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நீட் தேர்விற்கு ஏற்கனவே தமிழகத்தில் கடும் எதிர்ப்பு இருந்து வரும் நிலையில், தேர்வுக்கான நுழைவு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.