புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பரவி வருவதால் நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகள் அடுத்த மாதத்துக்கு (செப்டம்பர்) தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. கொரோனாவின் வீரியம் இன்னும் முற்றுப்பெறாததால், இந்த தேர்வுகளை மேலும் தள்ளி வைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற தேர்வுகள் திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சக அதிகாரி ஒருவர் நேற்று கூறினார். இந்த தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து வருவதாக தேசிய திறனாய்வு மையமும் கூறியுள்ளது.
இதற்கிடையே நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனாவால் போக்குவரத்து வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாததால், இந்த தேர்வுகளை தீபாவளிக்கு பிறகு நடத்த கல்வி அமைச்சகத்தை அறிவுறுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா அதிகரித்து வரும் இந்த சூழலில் தேர்வு நடத்தினால் நாடு முழுவதும் அதிகப்படியான மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கான வழி ஏற்படும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டு உள்ளார்.