புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பல்வேறு பகுதிகளில் மழை-வெள்ளச்சேதம் இருப்பதால் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறும் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை தள்ளி வைக்குமாறு மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பிரச்சினையை முன்வைத்து காங்கிரஸ் நேற்று நாடு முழுவதும் போராட்டமும் நடத்தியது.
இந்த நிலையில், மேற்படி நுழைவுத்தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அரசுக்கும், மாணவர்களுக்கும் வீடியோ மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதை கட்சியினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தனர்.
அதில் சோனியா கூறுகையில், நீங்கள்தான் (மாணவர்கள்) எங்கள் எதிர்காலம். சிறந்த இந்தியாவை உருவாக்க உங்களைத்தான் நாங்கள் சார்ந்து இருக்கிறோம். உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் நீங்கள் தற்போது மிகுந்த கடினமான சூழலில் இருக்கிறீர்கள். உங்கள் தேர்வு விவகாரம், உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் குடும்பத்துக்கும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, எனவே மாணவர்களின் நலன் சார்ந்து எந்த முடிவு எடுத்தாலும், அதில் அவர்களது ஒப்புதலையும் பெற வேண்டியது முக்கியம். அரசு உங்கள் குரலுக்கு செவிமடுத்து, உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படும் என நம்புகிறேன். இது, அரசுக்கு எனது அறிவுரை ஆகும் என்றும் தெரிவித்து இருந்தார்.