புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோரும் வலியுறுத்தி வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து நீட் தேர்வு செப்டம்பர் 13-ந்தேதியும், ஜே.இ.இ. (முதன்மை) தேர்வு செப்டம்பர் 1 மற்றும் 6-ந்தேதியும், ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு செப்டம்பர் 27-ந்தேதியும் நடைபெற உள்ளது.
மாணவர்கள் கோரிக்கை தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று டுவிட்டரில், நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் தொடர்பான மாணவர்களின் மனதின் குரலை (மன் கி பாத்) மத்திய அரசு கேட்க வேண்டும். விரைவாக அனைவரும் ஏற்கும் வகையில் ஒரு தீர்வை அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் மனதின் குரல் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம். அதனை குறிக்கும் வகையில், ராகுல் காந்தியின் டுவிட்டர் பதிவு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.