புதுடெல்லி,
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்தது. அதே மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதையடுத்து, 45 ஆயிரம் முதுநிலை மருத்துவ இடங்களில் சேருவதற்காக கலந்தாய்வை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருந்தனர்.
ஆனால், முதுநிலை மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரரீதியாக பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படும் என்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளால் கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கலந்தாய்வை தொடங்கக்கோரி கடந்த மாதம் நாடு முழுவதும் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர். பணிகளை புறக்கணித்தனர்.
இதற்கிடையே, கடந்த 7-ந் தேதி இவ்வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத ஒதுக்கீடும், பொருளாதாரரீதியாக பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கும் அறிவிப்பு செல்லும் என்று கூறியது. கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்தது.
இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு செல்லும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில், நாடு முழுவதும் 2021-2022 கல்வியாண்டின் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜனவரி 12-ந் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. இதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று அறிவித்தார்.
அவர் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்களுக்கு ஏற்கனவே உறுதி அளித்தபடி, நீட் தேர்வு அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜனவரி 12-ந் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. இதை மருத்துவ கலந்தாய்வு குழு நடத்தும். கொரோனாவுக்கு எதிரான போரில் இந்த நடவடிக்கை நாட்டுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.