புதுடெல்லி
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாதவகையில் கொரோனாவால் 4,529 பேர் இறந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 83 ஆயிரத்து 248 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 14-ந் தேதியில் இருந்து கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு இறங்குமுகம் கண்டு வருகிறது. இந்த வகையில் இன்று 6-வது நாளாக தொற்று பாதிப்பு சரிவை சந்தித்து உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் நாட்டில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 334 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகினர்.
உயிரிழப்பை ஏற்படுத்தும் கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகிறது.
நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 18 கோடியே 58 லட்ச்சத்து 09 ஆயிரத்து 302 பேர் ஆகும்.
நாடு முழுவதும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழலில் வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வது ஏன் என்ற சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் தொற்று குறைவாக இருந்தபோது தான் தடுப்பூசி ஏற்றுமதி செய்து வந்ததாகவும், தற்போது இந்தியாவிற்கு மட்டுமே முன்னுரிமை அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள மக்களின் செலவில் நாங்கள் ஒருபோதும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யவில்லை என்பதையும், நாட்டில் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆதரவாக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்பதையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.
இன்னும் மூன்று மாதங்களுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்பது இயலாத காரியம். நாட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த சுமார் 3 ஆண்டுகள் தேவைப்படும் என சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி அதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.