பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மலிவு விலை மருந்து கடைகள்
மத்திய அரசின் ஜனஅவுசதி திட்டத்தின் கீழ் மலிவு விலை மருந்து கடைகள் திறக்கப்படுகின்றன. இந்த மருந்து கடைகள் கர்நாடகத்தில் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 1,052 மருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கர்நாடகம் 2-வது இடத்தில் உள்ளது. கேரளா 3-வது இடத்தில் உள்ளது.
கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையில் மலிவு விலை மருந்து கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம். கர்நாடகத்தில் புதிதாக 500 மருந்து கடைகள் திறக்க முடிவு செய்துள்ளோம். அரசு ஆஸ்பத்திரிகளில் 40 மருந்து கடைகளை திறக்க அனுமதி கேட்டுள்ளோம். நடப்பு ஆண்டில் கர்நாடகத்தில் இதுவரை 300 மருந்து கடைகளை திறந்துள்ளோம். தேவைக்கு ஏற்பட மலிவு விலை மருந்து கடைகளை திறக்கிறோம்.
அறுவை சிகிச்சை உபகரணங்கள்
இந்த கடைகளில் சந்தை விலையை விட 50 முதல் 80 சதவீதம் குறைந்த விலையில் மருந்துகளை வழங்குகிறோம். உரிய பரிசோதனைகளை மேற்கொண்ட பிறகே இந்த மருந்துகள், கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. மொத்தம் 1,451 மருந்து கடைகள் உள்ளன. இதில் 240 அறுவை சிகிச்சை உபகரணங்கள், விலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளும் மலிவு விலை மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இந்த மருந்து கடைகளால் ஏழை நோயாளிகள் பயன் பெறுகிறார்கள்.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.