புதுடெல்லி,
நாடு முழுவதும் கடந்த 1-ந்தேதியிலிருந்து 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. இதில் தடுப்பூசி மையங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த பிரிவினருக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து தடுப்பூசி போடும் முறை மட்டுமே அமலில் இருந்தது. ஆனால் இவ்வாறு பதிவு செய்யும் பலர் குறித்த நேரத்தில் மையத்துக்கு வராததால் பல இடங்களில் தடுப்பூசி டோஸ்கள் வீணாவது தெரியவந்தது.
எனவே இதை தடுக்கும் வகையில் தடுப்பூசி மையங்களிலேயே பதிவு செய்து உடனடியாக தடுப்பூசி போடும் வசதியை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. அந்தவகையில் தடுப்பூசி மையங்களிலேயே இந்த பதிவுகளை மேற்கொள்ளும் வகையில் கோவின் இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அதேநேரம் இந்த வசதிகள் அரசு தடுப்பூசி மையங்களில் மட்டுமே கிடைக்கும் எனவும், தனியார் மையங்களில் இருக்காது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. எனினும் இந்த வசதி குறித்து அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.