மும்பை,
மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக நேற்று காலை அஜித்பவார் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா ஆட்சி அமைத்தது. மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்று கொண்டனர். இது மாநிலம் முழுவதும் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
மும்பை நரிமன்பாயின்டில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பா.ஜனதாவினர் ஆடிப்பாடி தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றதை கொண்டாடினர். இதேபோல தானே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இதற்கிடையே புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து, பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக மும்பையில் உள்ள சரத்பவாரின் வீடு, தாதரில் உள்ள சிவசேனா கட்சி அலுவலகமான சேனா பவன், உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம், முதல்-மந்திரியின் வர்ஷா பங்களா, நரிமன்பாயின்ட்டில் உள்ள பா.ஜனதா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மும்பை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசியல் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து, தேவையான இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளோம் என்றார்.