பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று புதிதாக 1,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், நேற்று 1,668 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 19,318 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
கொரோனா 3-வது அலையை தடுக்கும் நோக்கத்தில் பரிசோதனையை சரியான முறையில் நிர்வகிக்க ஒரு புதிய செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு பரிசோதனைகள் எண்ணிக்கை இலக்கு 1.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனைகளில் 10 சதவீதம், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் மாவட்டங்களில் நடைபெறும் மொத்த பரிசோதனைகளில் 50 சதவீதம் கிராமங்களில் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.