தேசிய செய்திகள்

ஊரடங்கு முடிவுக்கு பின்னர் அமல்படுத்த சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஊரடங்கு முடிவுக்கு வந்த பின்னர் அமல்படுத்துவதற்காக தனது கட்டுப்பாட்டில் உள்ள சென்னை. கோவை, மதுரை, திருச்சி, சேலம் விமான நிலையங்களுக்கு இந்திய விமான நிலையங்களின் ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொலைகார கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக 40 நாள் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. முதலில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களும், அதன்பின்னர் ஏப்ரல் 19 முதல் மே 3 வரை 19 நாட்களும் 2 கட்டங்களாக இந்த ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்த ஊரடங்கு காலத்தில் பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சரக்கு விமானங்கள், வெளிநாடுகளில் தவிக்கிற இந்தியர்களை அழைத்து வர சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் ஊரடங்கு வருகிற 3-ந் தேதி முடிவுக்கு வருகிறபோது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறபோது மீண்டும் பயணிகள் விமான சேவை தொடங்கி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்குக்கு பிந்தைய காலத்தில் பின்பற்றுவதற்காக தனது கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (ஏஏஐ) புதிய கட்டுப்பாடுகளை விதித்து அது தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 23 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 137 விமான நிலையங்கள் இந்திய விமான நிலையங்களின் ஆணைய கட்டுப்பாட்டில் வருகின்றன.

இந்த விமான நிலையங்களுக்கு விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகள் வருமாறு:-

* ஒரு விமான நிலையத்தில் பல முனையங்கள் இருந்தாலும், ஊரடங்குக்கு பின்னர் ஒரு முனையம் மட்டுமே செயல்பட வேண்டும்.

* ஒரு விமான நிலையத்தில் பயணிகள் வந்து இறங்குகிறபோது அவர்களது உடைமைகளை (பேக்கேஜ்) திரும்பி தருவதற்கான பேக்கேஜ் கேரவ்சல் ஒன்றுக்கு மேல் இருந்தால், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக மாற்று பேக்கேஜ் கேரவ்சல் பயன்படுத்தப்பட வேண்டும்.

* விமானங்களின் சேவை படிப்படியாக அதிகரிக்கிற வரையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சில்லரை விற்பனை கடைகள் இயங்கி அவை உணவு, குளிர்பானங்களை விற்றால் போதுமானது. ஆரம்ப கட்டத்தில் அவற்றில் டீ, காபி உள்ளிட்டவற்றை மட்டுமே விற்பனை செய்தால் போதும். சிற்றுண்டிகளை பாக்கெட்டில் விற்கலாம்.

* நகர நிர்வாகம் அல்லது மாநில நிர்வாகம் அனுமதிக்கும் வரையில் விமான நிலைய பார்களிலும், உணவு விடுதிகளிலும் மதுபானங்களை அனுமதிக்க முடியாது.

* பயணிகளுக்காகவும், விமான நிலைய ஊழியர்களுக்காகவும், விமான நிறுவனங்களின் ஊழியர்களுக்காகவும் பொதுபோக்குவரத்து சாதனங்கள், வாடகை கார்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் விமான நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

* கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரமான தாக்குதலுக்கு ஆட்பட்ட ஹாட்ஸ்பாட்களில் இருந்து வருகிற விமானங்களுக்காக, விமான நிறுவனங்கள் தனியாக விமானம் நிறுத்தும் இடத்தையும், பேக்கேஜ் பெல்ட்டுகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.

* சமூக இடைவெளியை பின்பற்றத்தக்க அளவில் விமான நிலைய முனையங்களின் கொள்திறன் குறித்து டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து, விமான நிலைய ஸ்லாட்டுகள் ஒதுக்கப்படும். இங்கு ஸ்லாட் என்பது விமான நிலையத்துக்கு விமானம் வந்து சேருகிற அல்லது விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுகிற நேர அளவு ஆகும்.

* விமான நிலையங்களில் இருக்கை வசதிகள் 1 முதல் 1 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்படுதல் வேண்டும்.

* பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுகிற வகையில், கழிவறை, எக்ஸ்ரே எந்திரம், கன்வேயர் பெல்ட்டுகள் ஆகியவற்றின் அருகே போதிய பணியாளர் நியமிக்கப்பட வேண்டும்.

* கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியவர்கள், தாக்கி இருக்கலாமோ என்ற சந்தேகத்துக்கு இடமானவர்கள் வருகிற போது அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் வருகிறபோது ஒட்டுமொத்த விமான நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகள் இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிற சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, அவுரங்காபாத், பெல்காம், புதுச்சேரி, திருவனந்தபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

இவற்றுக்கு இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் பொருந்தாது. அவற்றுக்கான கட்டுப்பாடுகளை அவற்றை நிர்வகிக்கிற தனியார் நிறுவனங்களே விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்