புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடந்தது. இதில் 43 பேர் இடம்பெற்றனர். புதிய மத்திய மந்திரிகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மத்திய மந்திரிசபையில், புதிதாக 15 மந்திரிகள், 28 இணை மந்திரிகள் பதவியேற்று கொண்டனர். இவர்களில் 36 பேர் புதியவர்கள் ஆவர்.
ஜோதிராதித்ய சிந்தியா, பூபேந்தர் யாதவ், சர்வானந்தா சோனோவால் மற்றும் பசுபதி குமார் பாரஸ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மத்திய மந்திரிகளாக பதவியேற்று உள்ளனர். 7 பெண் எம்.பி.க்கள் மந்திரிகளாக பதவியேற்று கொண்டுள்ளனர். தவிர, 7 இணை மந்திரிகள் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றுள்ளனர்.
இந்நிலையில், துறை சார்ந்த மத்திய மந்திரிகள் அதற்கான அலுவலகங்களில் இன்று முறைப்படி தமது பொறுப்புகளை ஏற்று கொண்டனர். மத்திய மந்திரிகளாக புதிதாக பொறுப்பேற்று கொண்ட அனைவரும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அக்கட்சி தலைமையகத்தில் இன்று சந்திக்கின்றனர்.