ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் துவாரபூடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். அதே கிராமத்தில் வசிக்கும் சந்தியாவை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவருமே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த காலத்தில் இருந்தே நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இது காதலாக மாறியது. சந்தியாவும் பிரகாஷை காதலித்துள்ளார். சந்தியா கோதாவரி மாவட்டத்தில் உள்ள உள்ளூர் மண்டல வருவாய் அதிகாரி அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருகிறார். பிரகாஷின் தந்தை அதே பகுதியில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். தந்தைக்கு உதவியாக கடையில் பிரகாஷ் இருந்துள்ளார்.
இவர்களின் காதலுக்கு சந்தியாவின் மூத்த சகோதரர் சந்திரபால் மற்றும் இளைய சகோதரர் கிரிபாபு ஆகியோர் சாதி வேறுபாடுகளைக் காரணம் காட்டி திருமணத்தை எதிர்த்ததாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், நேற்று சந்தியாவும்,சூரிய பிரகாஷும் இரு குடும்பத்தினருக்கும் தெரியாமல் கோவில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை சந்தியா தனது சகோதரர்களுக்கு போனில் அனுப்பி உள்ளார். திருமணம் விவகாரம் குறித்து தங்கை தங்களிடம் ஒன்றுமே கூறவில்லை என்று கடும் கோபம் அடைந்தனர். பிரகாஷ் வேலையில்லாமல் சுற்றி வருகிறாரே அவரை போய் தனது தங்கை திருமணம் செய்துகொண்டாரே என்று ஆதங்கப்பட்டனர்.
நிச்சயம் முதலிரவு கொண்டாட பிரகாஷ் அவரது வீட்டிற்கு வருவார் என்று சந்தியாவின் சகோதரர்கள் நினைத்தனர். அவர்கள் நினைத்ததுபோலவே திருமணமான புதுமண தம்பதி இரவில் துவாரபூடி கிராமத்தில் உள்ள மணமகனின் வீட்டிற்கு முதலிரவு கொண்டாடுவதற்காக வந்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டிருந்தது.
வழக்கமாக துணிக்கடையை பூட்டி விட்டு இரவு வீட்டிற்கு வரும் அப்பாவின் வருகைக்காக பிரகாஷ் வீட்டின் வெளியே காத்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தியாவின் சகோதரர்கள் பிரகாஷை மிகவும் கொடுரமாக கற்களை கொண்டு தாக்கினர். இதில் நிலைகுலைந்துபோன பிரகாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உயிருக்கு உயிராய் காதலித்த பிரகாஷ் ரத்தவெள்ளத்தில் கிழே விழுந்ததை கண்டு சந்தியா கூச்சலிட்டு புலம்பி அழுத்துள்ளார். அதற்குள் ஒட்டுமொத்த கிராமமே அங்கு கூடிவிட்டது. குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளதாக காவல்துறை அதிகாரி திவ்யா கூறியுள்ளார். தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திராவில் புதுமாப்பிள்ளை ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.