ஸ்ரீநகர்,
இஸ்லாமியர்கள் அதிகம் இருந்தாலும் ஐ.எஸ் இயக்கத்தால் இந்தியாவில் காலூன்ற முடியவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜ்நாத்சிங் கூறியதாவது:-ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலையானது மேம்பட்டுள்ளது. 2014-2017 ஆம் ஆண்டு கால கட்டங்களில் 368 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இடது சாரி பயங்கரவாதம் 65 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் சரண் அடைவது 185 சதவீதம் அதிகரித்துள்ளது.
சர்ஜிக்கல் தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதிகள் ஊடுருவல் 45 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 3 வருடங்களில் வட கிழக்கு மாநிலங்களில் 52 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்; 911 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நிலையிலும், ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் இங்கு காலூன்ற முடியவில்லை.
90 ஐ.எஸ்., ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டில், பாதுகாப்பு நிலைமை மேம்பட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக சமாளித்துள்ளோம். தேசிய புலனாய்வு அமைப்பு சுதந்திரமாக இயங்கும் விசாரணை அமைப்பு ஆகும். எனவே அவர்களின் நடவடிக்கை பற்றி கருத்து கூறவிரும்பவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.