மும்பை,
மும்பை நாக்பாடா பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி தானேயை சேர்ந்த ஜிகர் பாண்டியா(வயது27) என்ற வாலிபரை சிறிதளவு யுரேனியத்துடன் கைது செய்தனர். அவர் யுரேனியத்தை சட்டவிரோதமாக விற்க முயன்றபோது போலீசாரிடம் சிக்கியிருந்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மான்கூர்டை சேர்ந்த அபு தாஹிர் அப்சல் ஹூசேன் சவுத்திரி (31) என்பவர் தான் வாலிபரிடம் யுரேனியத்தை கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை குர்லா பழைய பொருள் விற்பனையாளர்கள் சங்கத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 கிலோ 100 கிராம் யுரேனியத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த யுரேனியம் ஆய்வுக்காக பாபா அணு ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அது அதிக கதிரியக்க தன்மை மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடிய 90 சதவீதத்திற்கு மேல் சுத்தமான இயற்கை யுரேனியம் என்பது தெரியவந்தது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட யுரேனியத்தின் மதிப்பு ரூ.21 கோடியே 3 லட்சம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் கடந்த 5-ந் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்தநிலையில் யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு குறித்த விவரங்களை மத்திய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரிடம் கேட்டு இருந்தனர். இதையடுத்து போலீசாரும் வழக்கு குறித்த விவரங்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கை நகலை என்.ஐ.ஏ.விடம் வழங்கி இருந்தனர்.
இந்தநிலையில் இயற்கை யுரேனியம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. மத்திய உள்துறையின் உத்தரவை அடுத்து இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ. தொடங்கி உள்ளது. இதற்காக என்.ஐ.ஏ. சம்பவம் குறித்து அணு ஆற்றல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளது.