புதுடெல்லி,
நிர்பயா என்று அழைக்கப்படுகிற துணை மருத்துவ மாணவி, டெல்லியில் 2012-ம் ஆண்டு, ஓடும் பஸ்சில் கும்பல் பலாத்காரம் செய்து, கொல்லப்பட்டார்.
இதில் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் 4 பேரும் தூக்கில் போடப்படுவதை தள்ளிப்போடுகிற வகையில் நாளும் ஒரு சட்டப்போராட்டத்தை கையில் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை கடந்த 1-ந்தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கில் போட ஏற்பாடு ஆனது. அதை எதிர்த்து அவர்கள் டெல்லி பாட்டியாலா செசன்சு கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களை தூக்கில் போட தடை விதித்து அந்த கோர்ட்டு கடந்த 31-ந்தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பிலும், மாநில அரசு சார்பிலும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை கடந்த சனிக்கிழமையிலும், ஞாயிற்றுக்கிழமையிலும் விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) ) தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும் குற்றவாளிகள் 4 பேரும் ஒருவாரத்துக்குள் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்திலேயே மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன.
இதனிடையே, நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் விவகாரத்தில் மத்திய அரசின் மனு தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு குறித்து நிர்பயாவின் தயார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இந்த தீர்பில் குற்றவாளிகள் 4 பேரும் ஒருவாரத்துக்குள் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளது. 4 குற்றவாளிகளுக்கும் 1 வாரம் அவகாசம் வழங்கி உள்ளது. இதன் பின்னர் குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிட வேண்டும் என்றார்.