புதுச்சேரி,
வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
அதே நேரத்தில் சென்னையில் 30 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசியபடி, மழையும் பெய்து கொண்டிருந்தது. மேலும் சென்னை மெரினா கடல் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதேபோல், மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன், பலத்த காற்றும் வீசியது. ஆனால் அதன்பிறகு புயலின் நகர்வில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது.
இதன்பின்னர் இரவு 10.45 மணிக்கு அதிதீவிர புயலின் ஆரம்பப்பகுதி புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக புயலின் மையப்பகுதி நள்ளிரவில் கடக்க தொடங்கியது. அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், தீவிர புயலாக வலுவிழந்து கரையை கடந்துள்ளது. இந்த தகவலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில், மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றும், கனமழையும் பெய்தது.
இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து செல்லும். அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நிவர் புயலால் புதுச்சேரியின் வடகிழக்கில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வரை வேகத்தில் பலத்த காற்று வீசும்.
இதன்பின்னர் அடுத்த 3 மணிநேரத்தில் அதன் வேகம் மெல்ல குறைந்து 65 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.