லக்னோ,
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த மாநாடு ஒன்றில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
அந்த மாநாட்டில் 2022ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தனது கட்சியின் செயல்திட்டங்கள் குறித்தும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவை குறித்தும் பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சியுடனும் சேர்ந்து அரசியல் கூட்டணி வைக்க மாட்டோம். இந்த முறை சமாஜ்வாடி தனித்து போட்டியிடும். தேவைப்பட்டால் எந்தவொரு சமரசமும் செய்து கொள்வோம். ஆனால் கூட்டணி வைக்க மாட்டோம். பிரிவினையை தூண்டும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றை சமாஜ்வாடி தொடர்ந்து எதிர்க்கும். என்.பி.ஆர். படிவங்களை எங்கள் கட்சி உறுப்பினர்கள் நிரப்பமாட்டார்கள். என்.பி.ஆர்., என்.ஆர்.சி.க்கு பதிலாக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்போதுதான் நாட்டில் ஒவ்வொரு சாதியிலும் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.