பஞ்சாப்பில் சுமுக முடிவு
காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் முக்கியமான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதில் பஞ்சாப்பில் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் மற்றும் மூத்த தலைவர்களில் ஒருவரும், கிரிக்கெட் வீரருமான சித்து இடையே ஏற்பட்ட மோதல் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் நிலைக்கு சென்றது.எனவே கட்சியின் தேசிய தலைமை தலையிட்டு இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. அத்துடன் சித்துவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அளித்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
சச்சின் பைலட் மோதல்
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மாநில கட்சி விவகாரங்களில் கட்சித்தலைமை தற்போது கவனத்தை திருப்பி உள்ளது. அங்கு துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு போர்க்கொடி உயர்த்தினார்.அங்கும் உட்கட்சி பூசல் முற்றவே இரு தரப்பினரிடமும் கட்சித்தலைமை பேசி தீர்வு கண்டது. மேலும் கட்சியிலும், ஆட்சியிலும் சச்சின் பைலட்டின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான பேச்சுவார்த்தைக்கு சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
முதல்-மந்திரியுடன் சந்திப்பு
இதன் தொடர்ச்சியாக மாநில மந்திரி சபையை மாற்றியமைக்க கட்சித்தலைமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கட்சியின் பாதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், மற்றொரு பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான அஜய் மக்கான் ஆகியோர் ஜெய்ப்பூர் சென்றனர். அங்கு அவர்கள் மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அத்துடன் முதல்-மந்திரி அசோக் கெலாட்டையும் தனியாக சந்தித்து பேசினர்.
ஒருமனதாக முடிவு
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மக்கான், ராஜஸ்தான் மாநில மந்திரி சபை மாற்றியமைப்பது தொடர்பாக மாநில தலைவர்களிடையே மோதல் எதுவும் இல்லை என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் முடிவு எடுக்க, மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பாக கட்சித்தலைமை மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறினார்.
மந்திரி சபை மாற்றியமைப்பதற்கான தேதி பற்றி எதுவும் தெரிவிக்காத மக்கான், 28-ந்தேதி மீண்டும் ராஜஸ்தானுக்கு வரவிருப்பதாகவும் கூறினார். மேலும் விலைவாசி, செல்போன் ஒட்டு கேட்பு விவகாரங்கள் குறித்தும் மாநில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மந்திரிகளுடனான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அஜய் மக்கான் தெரிவித்தார்.