புதுடெல்லி,
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து நடத்தப்படுவது வழக்கமானது. அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள் இவ்விருந்து நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார்கள். 2002 முதல் 2007 வரையில் இந்த விருந்து நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகையில் நடத்தப்படவில்லை, அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் நிகழ்ச்சியை ரத்து செய்தார். விருந்து நிகழ்ச்சியை ரத்து செய்த அப்துல் கலாம், அதற்காக செலவிடும் நிதி ஆதரவற்றோர்களுக்கு சென்றடைய செய்ய உத்தரவிட்டார். இதன்பின்னர் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜனாதிபதியான பின்னர் விருந்து நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டது.
இப்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜனாதிபதி மாளிகையில் இப்தார் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
பொதுமக்களின் வரிப்பணத்தில் ஜனாதிபதி மாளிகையில் மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு இடம் கிடையாது என்ற ராம்நாத் கோவிந்த் முடிவு செய்து உள்ளார், அதன்படி இவ்வாண்டு அங்கு இப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அசோக் மாலிக் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், 2017-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி மாளிகை பொது கட்டிடமாக இருக்க வேண்டும். பொதுமக்கள் வரிப்பணத்தில் மதரீதியிலான நிகழ்ச்சிக்கள் நடத்தப்படக்கூடாது என உத்தரவிட்டார். அனைத்து பெரிய மத விழாக்களுக்கும் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்து வருகிறார் என குறிப்பிட்டு உள்ளார்.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனும் கொள்கையை உறுதிசெய்யும் வகையில் மாளிகையில் மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.