புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் தினசரி தொற்று 20 ஆயிரத்துக்குமேல் சென்றுள்ளது. இதில் கொரோனா வைரசின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் அதிகரித்து வருகிறது.
இதனிடையே டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. இரவுநேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை மாநில அரசு அமல்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளது. டெல்லியில் நேற்று ஒரேநாளில் 10,665 பேர் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் பொது முடக்கம் அவசியமில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அவர், டெல்லியில் இன்று மட்டும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தினசரி தொற்று விகிதம் 14% அதிகரிக்கக்கூடும். எனினும் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை. டெல்லியில் ஒமைக்ரான் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இருப்பதால் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை. ஆஸ்பத்திரிகளில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.