புதுடெல்லி,
பிரதமர் மோடி 16வது பிரவாசி பாரதீய திவாஸ் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வழியே இன்று பேசும்பொழுது, உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து கொண்டு நாம் இணையதளம் வழியே இன்று தொடர்பில் இருந்து வருகிறோம்.
ஆனால், நமது மனது எப்பொழுதும் பாரத மாதாவுடன் இணைந்து உள்ளது. கடந்த ஆண்டுகளில், பிற நாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் தங்களது அடையாளங்களை அந்த நாடுகளில் வலுப்படுத்தி வந்தனர்.
இந்தியா கடந்த காலங்களில் கொரோனா பாதுகாப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பரிசோதனை உபகரணங்கள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்தது. ஆனால், இன்று நாம் சுயசார்புள்ள நாடாக மாறியுள்ளோம் என பெருமிதமுடன் கூறினார்.
கொரோனா தடுப்புக்காக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இரண்டு தடுப்பு மருந்துகளை கொண்டு மனித குலத்தினை காக்க இந்தியா தயாராக உள்ளது என அவர் கூறினார்.
இந்தியா பயங்கரவாதத்தினை எதிர்கொண்டு நின்றபொழுது, அந்த சவாலை எதிர்க்கும் துணிச்சல் உலகிற்கும் வந்தது. இன்றைய காலகட்டத்தில்
ஊழலை ஒழிக்க இந்தியா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது.
லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான பணம், பயன்பெறுவோரின் வங்கி கணக்கிற்கு நேரடியாகவே கொண்டு சேர்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள ஏழைகளை அதிகாரம் படைத்தவர்களாக ஆக்குவதற்கு நடந்து வரும் முயற்சிகள் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில், வளர்ந்து வரும் நிலையில் உள்ள ஒரு நாடு கூட வழிநடத்தி செல்ல முடியும் என நாம் செய்து காட்டியுள்ளோம்.
நாடு உடைந்து விடும் என்றும் இந்தியாவில் ஜனநாயகம் சாத்தியமில்லை என்றும் சிலர் கூறினார்கள். ஆனால், ஒரு வலிமையான மற்றும் திடமிக்க ஜனநாயக நாடாக இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது என்பதே உண்மை என பிரதமர் மோடி பேசியுள்ளார்.