கடப்பா,
அசாம் மாநிலத்தில் 1951-க்கு பிறகு சமீபத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) தயாரித்து வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பட்டியலில் 19 லட்சம் பேரது பெயர்கள் விடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்திருந்தார். இதற்கு பரவலாக எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடப்பா நகரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய, ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம். அதை ஆந்திராவில் அமல்படுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும், சிறுபான்மையினர் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலர் வந்து தன்னை சந்தித்து, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் ஆந்திர அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அவர்களிடம் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அரசு ஆதரிக்காது என்று தான் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.