கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சி காலம் முடிவடையும் வரை பதவியில் நீடிப்பார். இதில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் கட்சி மேலிடமும் இதை கூறியுள்ளது. கட்சி மேலிட தலைவர்களே கூறிவிட்ட நிலையில் எடியூரப்பா மாற்றம் குறித்த கேள்விக்கே இடமில்லை. கர்நாடகத்தில் பா.ஜனதா பலமாக உள்ளது. எடியூரப்பா அனைவரின் நம்பிக்கையை பெற்று ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறார்.
சமீபத்தில் எடியூரப்பா தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. இது மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட். எதிர்க்கட்சியான காங்கிரசில் தலைமை யார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. முதலில் அக்கட்சி தலைவர்கள் தங்களின் குழப்பங்களை சரிசெய்துகொள்ள வேண்டும். அதன் பிறகு பிற கட்சிகள் குறித்து அவர்கள் பேச வேண்டும்.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.