புதுடெல்லி,
மாநிலங்களவையில் பயங்கரவாத செயல்பாடு தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், சில துஷ்டர்களால் ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். மற்றும் பாகிஸ்தானின் கொடிகள் அசைக்கப்படுகிறது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் கொள்கையை கொண்ட ஐஎஸ்ஜேகே இயக்கத்தை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஜூன் 22-ம் தேதி கொல்லப்பட்டனர். இப்போது அந்த இயக்கத்தின் செயல்பாடு அங்கு கிடையாது. பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்களின் கொடிகளை அசைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று 2015-ல் 8 வழக்குகளும், 2016-ல் 31 வழக்குகளும், 2017-ல் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின்னர் கற்களை வீசிய சம்பவங்களில் 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். அதனுடன் 39 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 8 பாதுகாப்பு படை வீரர்களும், பொதுமக்களில் மூவரும் உயிரிழந்து உள்ளார்கள். அந்த சம்பவங்களில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு மாநிலத்தில் 86 உள்ளூர் பயங்கரவாதிகள் உள்பட 213 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.