மும்பை,
மராட்டியத்தில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் பா.ஜனதா, அஜித்பவார் ஆதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இது சட்ட விரோதமானது என சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு அவசர மனுவாக நீதிபதிகள் என்.வி. ரமணா, அசோக்பூஷண், சஞ்சீவ் கண்ணாஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்தது. முடிவில் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆதரவாக வழங்கப்பட்டது மற்றும் கவர்னர் அழைப்பு விடுத்தது ஆகிய 2 கடிதங்களை கோர்ட்டில் நாளை ( 25ம் தேதி) தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் நாளை காலை நடக்கும் விசாரணையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனிடையே மராட்டிய துணை முதல்-மந்தி அஜித் பவார் தனது டுவிட்டரில், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் தொடர்ந்து நீடிப்பதாகவும், தங்களின் தலைவர் சரத் பவார் தான் என்றும், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பா.ஜனதா- தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி நிலையான ஆட்சியை மகாராஷ்டிராவில் கொடுக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், சிவசேனா- காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி என்பது ஒருமித்தமாக எடுத்த முடிவு. பா.ஜனதாவுடன், தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது என்று அஜித் பவார் தெரிவித்திருப்பது தவறானது. அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தவறாக வழிநடத்தும் என்று பதிவிட்டுள்ளார்.