திருவனந்தபுரம்,
கேரளாவில் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அங்கு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 16 ஆம் தேதி வரை 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்படும் என்றும் அதன் பிறகு கேரளாவில் இருந்து பிற மாநிலங்களுக்கு வழங்குவதற்கு ஆக்சிஜன் இருப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் கேரளாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதற்காக 450 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.