போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சாத்வி பிரக்யா. இவர் சமீபத்தில் தனது போபால் தொகுதிக்கு உட்பட்ட செஹோர் பகுதியில் பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதை தயவு செய்து புரிந்து கொள்ளவும். நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ அதைச் சரிவர செய்வேன்.
மற்றபடி உங்கள் பகுதியில் உள்ள இதுபோன்ற சிறுசிறு பிரச்சினைகளை அதற்கான உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து முடித்துக் கொள்ளுங்கள். சாதாரண பிரச்சினைகளுக்கு எல்லாம் என்னை தொலைபேசியில் அழைக்காதீர்கள் என்றார். தூய்மை இந்தியா திட்டத்தை மோடி தலைமையிலான அரசு தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அவரது கட்சியை சேர்ந்த எம்.பி. சுகாதாரப்பணியை பற்றி விமர்சிக்கும் வகையில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.