மும்பை,
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவதி திரைப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. 14-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக கூறப்படும் சித்தூர் ராணி பத்மினியின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இப்படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்தும் படத்தின் பெயரை பத்மாவத் என மாற்றம் செய்தும் திரைப்பட தணிக்கை வாரியம் அனுமதி வழங்கியது.
பத்மாவத் திரைப்படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்து ஹரியாணா மாநிலம் குருகிராமில் வன்முறை நடந்தது. அப்போது, பள்ளிக்கூட பேருந்து மீது சில வன்முறையாளர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். பத்மாவத் படத்துக்கு எதிராக இத்தனை களேபரங்கள் நடந்தது. இந்த நிலையில் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அமைபுகளில் முதன்மையான ஒன்றான, ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜ்புட் கர்னி சேனா போராட்டத்தை வாபஸ் வாங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. படத்தில் ராஜ்புத் அமைப்பினரை தவறாக சித்தரிக்கவில்லை என்பதால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், திடீர் திருப்பமாக கர்னி சேனா அமைப்பு படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ராஜ்புட் கர்னி சேனா அமைப்பினர் கூறியிருப்பதாவது:- பத்மாவத் படத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். பத்மாவத் படத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என்ற கடிதம் எங்களுடையது இல்லை. நாங்கள் இன்னும் பத்மாவத் படத்தை பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளது.