மத்திய பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் 1955ல் திருத்தங்கள் செய்து மக்களவையில் தாக்கல் செய்தது. அந்த திருத்தத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2014ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு அசாமில் எதிர்ப்பு எழுந்தது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை பாராளுமன்றக் கூட்டுக்குழு அவையில் தாக்கல் செய்தது.
மசோதாவிற்கு அசாம் உள்பட வடகிழக்கு மாநிலங்களில் உள்ள அமைப்புகள் எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் இருந்து அசாம் மாநில கட்சியான அசாம் கனபரிசத் கட்சி விலகியது.
இந்நிலையில் மாநிலங்களவையில் குடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் பா.ஜனதா கூட்டணியிலிருந்து விலகுவோம் என மேகலாயா முதல்வர் கான்ராட் கே சங்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கிழக்கு மாநிலங்களை சேர்ந்த என்பிபி கட்சித் தலைவர்களின் கூட்டம் மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் கான்ராட் கே சங்மா பேசுகையில், சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றும் முயற்சியை மத்தியில் ஆளும் பாஜக அரசு கைவிட வேண்டும். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து எங்கள் கட்சி விலகுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேகலாயத்தில் ஆட்சி செய்து வரும் என்பிபி கட்சி, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து ஆகிய பிற வட கிழக்கு மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது.