தேசிய செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது: நாராயணசாமி

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. லஞ்சம் இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை என்று நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

தினத்தந்தி

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விதிமுறைகள் மீறல்

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல மாநிலங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. முதல் மற்றும் 2-வது அலையில் பல்வேறு உயிர்கள் பலியாகி உள்ளன.

தற்போது ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. அப்படியிருக்க தேவையில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இது ஐகோர்ட்டு விதிமுறைக்கு எதிரானது. இதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பதில் சொல்ல வேண்டும்.

ரங்கசாமியே பொறுப்பு

புதுவையில் தொற்று பாதிப்பு அதிகமானால் அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தான் பொறுப்பு. ஒமைக்ரான் தொற்று பாதிப்பு 2 பேருக்கு கண்டறியப்பட்டுள்ள நிலையிலும் மக்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவை அரசு மிகவும் மெத்தனமாக உள்ளது. இது வேதனை அளிக்கிறது.

புதுவையில் முதல் தவணை தடுப்பூசியை 70 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 40 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். புதுவையில் குறைந்த அளவிலேயே மக்கள்தொகை உள்ள நிலையில் அவர்களுக்குக்கூட முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை. பொருளாதாரம், வேலைவாய்ப்பை பற்றி இந்த அரசுக்கு அக்கறை இல்லை.

பிரதமரை சந்திக்காதது ஏன்?

தற்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து கேட்கிறார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது ஜனாதிபதி, பிரதமர், உள்துறை மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். அப்போது காங்கிரஸ் ஆட்சி என்பதால் மாநில அந்தஸ்து தரவில்லை. தற்போது என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசு தான் உள்ளது.

அப்படியிருக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரியை சந்தித்து அழுத்தம் கொடுக்காதது ஏன்? பா.ஜ.க. அரசு புதுவை மக்களை வஞ்சிக்கிறது. மாநில அரசு கேட்கும் நிதியை தருவதில்லை. புதுவை அரசில் கடந்த 6 மாதமாக அதிகார சண்டைதான் நடக்கிறது.

ஊழல் மலிந்துவிட்டது

புதுவை அரசு புதிதாக எந்த திட்டத்தையும் கொண்டுவந்து நிறைவேற்றவில்லை. கூடுதலாக 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை உயர்வு போன்றவை நாங்கள் கொண்டு வந்த திட்டம்தான். என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. லஞ்சம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இதற்காக ஒருநாள் மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து