புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கிறது.
இதனையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் நேற்று சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதும் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கிடையே மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் குழப்பம் நிலவுவதாக தெரிகிறது. மாநிலத்தில் இயல்பு நிலை திரும்புவதை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
முன்னதாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சுமார் 10 நாட்கள் காஷ்மீரிலேயே தங்கி இருந்தார். நிலைமையை நேரில் கண்காணித்தார்.
இந்நிலையில் டெல்லி திரும்பிய அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது, காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்த சந்திப்பின்போது, காஷ்மீரில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.