ஜெய்பூர்,
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மத்திய, மாநில அரசுகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
இது தவிர கிராமங்களிலும், போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்களிடமும் தடுப்பூசியை கொண்டு சேர்க்கும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களின் வீடுகளை தேடிச் சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சுகாதார பணியாளர் ஒருவர் ஒட்டகத்தில் பயணித்து கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இதனை அர்பணிப்பு மற்றும் உறுதியின் அடையாளம் என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பகிர்ந்து, பலர் அந்த செவிலியருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.