புதுடெல்லி,
இந்தியாவில் அசாம், பீகார், ஜார்க்காண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள நீண்ட ஆழமான நதிப் பகுதிகளில் டால்பின்கள், நன்னீர் டால்பின் இனங்கள் காணப்படுகின்றன. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி இந்திய நதிகளில் சுமார் 3,700 டால்பின்கள் உள்ளன.
பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நன்னீர் மற்றும் கடல் டால்பின்கள் என இரண்டையும் பாதுகாக்க டால்பின் திட்டத்தை அறிவித்தார்.
இந்த நிலையில், நடப்பு ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதி தேசிய டால்பின் தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், 'தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு, தன்னுடைய 67-வது கூட்டத்தில் நடப்பு ஆண்டு முதல் அக்டோபர் 5-ம் தேதியை தேசிய டால்பின் தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவை இந்தக் குறிகாட்டி இனத்தைப் பாதுகாப்பதில் ஒருங்கிணைந்ததாகும்' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.