புதுடெல்லி,
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை வேளைகளில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. பனியுடன் புகை மூட்டமும் இணைந்து டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கண் எரிச்சல் மூச்சுத்திணறல் போன்றவற்றால் அவதிப்பட்டனர். டெல்லியில், புகை மூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயமும் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வரை, கட்டுமானங்களில், மேற்கொண்டு புதிய கட்டுமானப்பணிகள் எதையும் அடுத்த உத்தரவு வரும் வரை மேற்கொள்ள கூடாது. டெல்லி மற்றும் என்.சி.ஆர் ஆகிய பகுதிகளில் அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும். 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை. கட்டுமானப்பொருட்களுடன் வரும் எந்த வாகனங்களும் டெல்லிக்குள் அனுமதிக்கப்படாது உள்ளிட்ட தடைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் மீண்டும் வரும் நவம்பர் 13 ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு வாகன கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்த உள்ளதாக போக்குவரத்து துறை மந்திரி கைலாஷ் காலோட் தெரிவித்துள்ளார். வாகன கட்டுப்பாட்டின் கீழ், வாகனத்தின் எண் பலகையில் இறுதி எண்ணின் அடிப்படையில் ஒற்றப்படை, இரட்டை படை என பிரித்து, ஒற்றப்படை தேதிகளில் ஒற்றைப்படை எண்களில் முடியும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும்.அன்றைய தினம், இரட்டைப்படை எண்ணில் முடியும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படாது. இதேமுறை இரட்டைப்படை தேதிகளில் இரட்டைப்படை வாகனங்களுக்கு பின்பற்றப்படும். தனிநபர் வாகனங்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கடந்த 2016 ஆம் ஆண்டு இதே விதிமுறைகள் இருமுறை கடைபிடிக்கப்பட்டது. ஜனவரி 1 முதல் 15 வரையும் ஏப்ரல் 15 முதல் 30 ஆம் தேதி வரையும் இந்த விதிமுறை பின்பற்றட்டது நினைவு கொள்ளத்தக்கது.